பனாஜி:
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர்.
இந்நிலையில், கோவா மாநிலம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. கோவாவில் தகுதி உள்ள 11.66 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் ஐரா அல்மெய்டா தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைந்த பிறகு, மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகம் அதன் அனைத்து தடுப்பூசி மையங்களையும் மூடிவிட்டு, அவற்றை சாதாரண நோய்த்தடுப்பு திட்டத்தில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசி திட்டம் தொடரும், ஆனால் அது சாதாரண நோய்த்தடுப்பு திட்டத்தின் அட்டவணைக்கு ஏற்ப இருக்கும் என்றும் அவர் கூறினார்.
100 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டிருப்பதால், இனி மக்கள் தடுப்பூசி செலுத்த வருவதை நிறுத்திவிடுவார்கள் என்று அர்த்தம் இல்லை, ஏற்கனவே மாநிலத்தை விட்டு வெளியேறியவர்களில் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கலாம், அவர்கள் திரும்பி வரும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள், என மாநில நோய்த்தடுப்பு அதிகாரி டாக்டர் ராஜேந்திர பார்க்கர் குறிப்பிட்டார்.
கோவா மாநிலத்தில் நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 2,44,287 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 3,777 ஆகவும் உள்ளது. பாதிப்பு விகிதம் 4.22 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.