அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 26 ஆண்டுகளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு முதல் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பதவிவகிக்கும் அரங்கோ என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் தலையிடமான வாடிகன் அனுமதித்த சூத்திரத்தை தவறாக பயன்படுத்தியது தற்போது தெரியவந்திருக்கிறது.
கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி ஞானஸ்நானம் பெற்ற ஒருவரே அனைத்து விதமான தேவ ஆசீர்வாதங்களுக்கும் தகுதியானவர் என்பதால் இது அந்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள் இடையே வருத்தத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து அத்திருச்சபையின் செய்தித்தொடர்பாளர் புர்கி கூறியபோது, “வாடிகன் அங்கீகரித்த ‘நான் உனக்கு ஞானஸ்நானம் வழங்குகிறேன்’ என்பதற்கு பதில் ‘நாங்கள் உனக்கு ஞானஸ்நானம் வழங்குகிறோம்’ என்று சூத்திரத்தை மாற்றியதாக 2021 ம் ஆண்டின் மத்தியில் வந்த புகாரை அடுத்து பாதிரியார் அரங்கோ-விடம் விளக்கம் கேட்கப்பட்டது.
1995 ல் பொறுப்பேற்றது முதல் இந்த தவறான சூத்திரத்தை பயன்படுத்தியதாக பாதிரியார் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் அந்த பணியில் இருந்து மாற்றப்பட்டார்” என்று தெரிவித்தார்.
இந்த தவறான நடவடிக்கையால் கடந்த 26 ஆண்டுகளாக அந்த தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்து கொண்டவர்கள் அனைவரும் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று வாடிகன் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து திருச்சபை ஊழியத்தில் இருந்து வெளியேறுவதாக அரங்கோ தெரிவித்துள்ளார்.