கொரோனா பரவல் குறைந்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இந்தியாவுக்கு பரவி கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்தது. இதன் காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தது. இதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய – மாநில அரசுகள் கடுமையாக்கின. மத்திய அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர்
ராஜேஷ் பூஷண்
எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த ஜனவரி 21 ஆம் தேதி முதல் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த வாரம் 50 ஆயிரமாக பதிவான கொரோனா தொற்று, நேற்றைய நிலவரப்படி (பிப்ரவரி 15) 27 ஆயிரமாக குறைந்துள்ளது. தொற்று உறுதியாகும் விகிதமும் 3.56 சதவீதமாக குறைந்தது.
இந்த சூழ்நிலையில், மாநில அரசுகள் விதித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் மக்களின் நடமாட்டம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கக் கூடாது. அதே நேரத்தில் தொற்று உறுதியாகும் விகிதத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து கண்காணிப்பதுடன், சோதனை, தொற்று உறுதியானவர்களை கண்டுபிடித்தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் பரவலை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.