உக்ரைன் – ரஷ்யா விவகாரம் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த விவகாரத்தில் ரஷ்யா தரப்பிலிருந்து தீர்க்கமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் பல நாடுகளும் உக்ரைனில் வசித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. நேற்றுகூட ரஷ்யா, உக்ரைன் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களில் சில பகுதியினரை தங்கள் முகாம்களுக்கே திருப்பியனுப்பியதாக கூறியது. ஆனால், அமெரிக்காவோ, ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து முழுமையான உறுதியான தகவல் ஏதும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், பெலாரஸ் நாட்டின் தலைநகரான மின்ஸ்க்-ல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “உக்ரைன் எல்லையில், மின்ஸ்க் மற்றும் மாஸ்கோவின் கூட்டு ராணுவப் பயிற்சி முடிந்ததும் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் கூட உக்ரைன் நாட்டில் தங்கமாட்டார்” என பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேக்கி கூறியுள்ளார். மேலும், பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மற்றும் பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தெளிவாக கூறியிருப்பதாகவும் விளாடிமிர் மேக்கி செய்தியாளர்களிடத்தில் கூறினார்.