புதுடில்லி:’இருசக்கர வாகனங்களில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்கையில், கட்டாயமாக, ‘ஹெல்மெட்’ அணிவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிக்கை:இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இனி கட்டாயமாக, ஹெல்மெட் அணிவிக்க வேண்டும்.மேலும், பயணத்தின் போது குழந்தைகள் கீழே விழாமல் இருக்க, ‘சேப்டி ஹார்னஸ்’ எனப்படும் பாதுகாப்பு ‘பெல்ட்’ உடன் குழந்தைகளை இணைக்க வேண்டும்.
இந்த பெல்ட், அதிக எடை இன்றி, ‘குஷன்’ வசதியுடன், 30 கிலோ எடை வரை தாங்க கூடியதாக இருக்க வேண்டும்.குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்கையில், மணிக்கு 40 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் பயணிக்க வேண்டும்.புதிய உத்தரவை மீறுவோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஓட்டுனர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement