திருமலை:
திருப்பதி, ஏழுமலைகளில் ஒன்றான அஞ்சனாத்திரி மலையில்தான் அனுமன் பிறந்ததாகக் கருதப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்வெட்டு, புவியியல் மற்றும் அறிவியல் சான்றுகளுடன் அஞ்சனாத்திரியே அனுமனின் அவதாரத் தலம் என்று உறுதிப்படுத்தப்படுத்தி உள்ளது.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை சார்பில் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி பர்வதத்தில் அனுமன் பிறந்த இடத்தை புனித தலமாக மாற்றும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
விசாக ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி, ராம ஜென்மபூமி, ஹனுமான் ஜென்ம பூமி தலைவர் ஸ்ரீரபத்ராச்சார்யா ஸ்வரூபானந்த சரஸ்வதி உள்பட பல்வேறு பீடாதிபதிகள் மற்றும் பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் வேதங்களின் பிறப்பிடமாகும், வெங்கடேஸ்வர சுவாமியின் அருளும் அனுமதியும் இல்லாமல் எதுவும் நடக்காது என்று ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி தெரிவித்தார்.
அஞ்சனாத்திரி மலை அனுமன் பிறந்த இடம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இது பல வேத மற்றும் அறிவியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூமி பூஜையையொட்டி ஹனுமான் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது.
காணிக்கையாளர்கள் உதவியோடு இங்கு அஞ்சனாதேவி, பால ஆஞ்சநேயர் கோவில்கள், முக மண்டபம், கோபுரங்கள், கோ-கர்பம் அணை அருகில் அமைக்கப்படும். புகழ்பெற்ற கலை இயக்குனர் ஒருவரின் வடிவமைப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.