புதுடெல்லி:
இந்தி்யாவின் விளையாட்டுப் பயிற்சியை வலுப்படுத்தும் முயற்சியாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், இந்திய விளையாட்டுக்கள் ஆணையமும் 398 பயிற்சியாளர்கள் பணியை நீடித்துள்ளன.
இது குறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது:
2024 மற்றும் 2028 ஒலிம்பிக் உட்பட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் தயார்படுத்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் விளையாட்டு வீரர்களும், சர்வதேச நிலையில் போட்டியிட்டவர்களும், பதக்கம் வென்றவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பலர் உலக சாம்பியன் போட்டிகள், ஒலிம்பிக்ஸ் போன்ற உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்கள்.
அர்ஜுனா விருதும் பெற்ற பஜ்ரங் லால் தக்கார் படகு செலுத்தும் போட்டியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2011-ல் காமன்வெல்த் விளையாட்டுக்களில் தங்கப்பதக்கம் வென்ற ஷில்பி ஷோரன் மல்யுத்தப் போட்டியின் உதவிப் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார்.
ஒலிம்பிக் வீராங்கனை ஜின்சி பிலிப் தடகள போட்டிகளுக்கான பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சாம்பியன் பட்டப் போட்டிகளில் பல பதக்கங்கள் வென்ற முன்னணி வீரர் பிரணாமிகா போரா குத்துச்சண்டை பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு ஒப்பந்தம் முடிந்த பல பயிற்சியாளர்கள் அவர்களின் தகுதி அடிப்படையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.