இருசக்கர வாகன பயணத்தில் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன. இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர் களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
2019-ம் ஆண்டுநேரிட்ட விபத்துகளில் 11,168 குழந்தைகள்உயிரிழந்தன. அதாவது நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 31 குழந்தைகள் விபத்தில் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வரைவு விதிகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன. இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த வரைவு விதிகளில் கூறப்பட்டு இருந்ததாவது:
நான்கு வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது, ஓட்டுநர் உடன் குழந்தையை இணைக்கும் வகையில் பெல்ட் அணிவிக்க வேண்டும்.
இந்த பெல்ட் இந்திய தர கட்டுப்பாட்டுஅமைப்பின் (பிஐஎஸ்) தர நிர்ணயத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இணைப்பு பெல்ட் எடை குறைவாகவும், நீளத்தை கூட்டி, குறைக்க ஏதுவாகவும், நீர்புகா தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும். 30 கிலோ எடையை தாங்க வேண்டும்.
இருசக்கர வாகனத்துக்கு பின்னால் அமர்ந்திருக்கும் 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். பிஐஎஸ்தரத்துடன்கூடிய ஹெல்மெட்டை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது.
என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டு மக்களிடம் கருத்துக் கோரப்பட்டது.
இந்தநிலையில் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது
1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதி 138 நேற்று (பிப்ரவரி 15) திருத்தப்பட்டதன் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த இறுதி செய்யப்பட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-ன் கீழ் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு சேணம் அல்லது தலைக்கவசம் பயன்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய மோட்டார் வாகனங்களின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டராக மட்டுமே இருக்க வேண்டும்
மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) விதிகள் 2022 வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின் இந்த விதிகள் அமலுக்கு வரும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.