பிரசல்ஸ் : வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.கடந்த, 2021 செப்.,ல் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிச.,ல் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பார்லி., ஒப்புதலுக்குப் பின், நான்கு நாள் வேலை திட்டம், வரும் மே அல்லது ஜூனில் அமலுக்கு வரும் என, தெரிகிறது.
இது குறித்து பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர்- டி- க்ரூ கூறுகையில், ”கொரோனா காலத்தில் பணிச்சூழல் மாறியதற்கு ஏற்ப, தொழிலாளர் சந்தையும் மாற வேண்டியுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, குடும்பத்திற்கும்,வேலைக்கும் சமமான நேரத்தை ஒதுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது,” என்றார்.
நான்கு நாள் வேலையின் முக்கிய அம்சங்கள்
வாரம் 4 நாள் வேலை ; ஊதியக் குறைப்பு இல்லை, ஒரு வாரத்திற்கு, 38 மணி நேரப் பணி, ஒரு வாரத்தில் கூடுதல் நேரம் பணியாற்றி அடுத்த வாரம் குறைத்துக் கொள்ளலாம், வேலை நேரம் முடிந்த பின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை அணைத்து விடலாம், வேலை நேரத்திற்குப் பின் மொபைல் போனில் வரும் பணி சார்ந்த செய்திகளை கண்டு கொள்ளாமல் இருக்கலாம்.
Advertisement