திருவனந்தபுரம்: இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன், இளம் எம்எல்ஏவை திருமணம் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதிலேயே மேயராகி, இந்தியா முழுவதும் பேசப்படும் இளம் தலைவரானவர் இந்த ஆர்யா. கடந்த ஆண்டு நடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இவரை மாநகராட்சி மேயராகவும் மார்க்சிஸ்ட் கட்சி ஆக்கியது. இந்திய அளவில் இளம்வயதில் மேயரான பெருமையை இதன்மூலமாக பெற்ற ஆர்யா, இப்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார். கேரள சட்டப்பேரவையின் இளம் வயது எம்எல்ஏவான சச்சின் தேவ்வை கரம்பிடிக்க இருக்கிறார்.
ஆர்யாவும், சச்சினும் சிறுவயதில் இருந்தே மார்க்சிஸ்ட் கட்சியின் குழந்தைகள் அமைப்பான பால சங்கத்தில் பணியாற்றியதில் இருந்து பழகி வந்தவர்கள். இதேபோல் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். சச்சின் தேவ் இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளராகவும், இந்திய இணைச் செயலாளராகவும் உள்ளார். கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பையும், கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்துள்ள சச்சின் தேவ், தற்போது பாலுச்சேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.
திருமணம் தொடர்பாக பேசியுள்ள மேயர் ஆர்யா, “நாங்கள் இருவரும் ஒரே அரசியல் சித்தாந்தத்தை கொண்டுள்ளோம். SFI-ல் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. எனவே இருவரும் திருமணம் செய்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். இதை எங்களுக்குள்ளே விவாதித்து, அதன்பிறகே பெற்றோர்களிடம் தெரிவித்தோம். நாங்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதால், தேவையில்லாத வதந்திகள் ஏற்படாமல் இருக்க கட்சிக்கும், குடும்பத்துக்கும் தெரிவித்துள்ளோம். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இரு குடும்பத்தினரும், கட்சியினரும் கலந்து ஆலோசித்து தேதி குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் தேவ்வின் தந்தையும் இந்த திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். “ஆர்யாவும், சச்சின் தேவும் சிறுவயதில் இருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. கொள்கைப்பிடிப்புள்ள இவர்கள் இருவரும் சேர்ந்து தம்பதிகளாக வாழ்வது பொருத்தமாக இருக்கும்” என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.