சிங்கப்பூர்:சிங்கப்பூர் பார்லி.,யில் பொய்யான தகவல் கூறிய குற்றச்சாட்டின் பேரில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் உள்பட இரு எம்.பி.,க்களிடம் அரசு வழக்கறிஞர் விசாரணை நடத்த வேண்டும் என பார்லி., பரிந்துரைத்துள்ளது.
இந்திய வம்சாவளி
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பார்லி.,யில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் உள்ளார். இவர் மற்றும் இவரது கட்சி எம்.பி., பைசல் மனாப் மீது பார்லி.,யில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பார்லி., சிறப்பு உரிமைகள் குழுவின் விசாரணை அறிக்கை சமீபத்தில் தாக்கலானது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் பார்லி., கூட்டத்தில் நான்கு மணி நேரம் விவாதம் நடந்தது.முடிவில் எம்.பி.,க்கள் ப்ரீத்தம் சிங் மற்றும் பைசல் மனாப் ஆகியோர், அரசு வக்கீல் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தண்டனை
இதுகுறித்து பிரதமர் லீ சியென் லுாங் சபையில் கூறியதாவது:எதிர்க்கட்சி தலைவரும் மற்றொரு எம்.பி.,யும் சத்திய பிரமாணத்தை மீறி சபையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து உள்ளனர். இதற்கு பார்லி.,யே அவர்களுக்கு தண்டனை வழங்கி இருந்தால், அதை எதிர்க்கட்சி மீதான தாக்குதல் என கூறுவார்கள்.தற்போது அவர்கள் நடவடிக்கை குறித்து விசாரித்த சிறப்பு உரிமைகள் குழு, அரசு வக்கீலிடம் இப்பிரச்னையை கொண்டு செல்லும்படி கூறி உள்ளது.
இதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராகட்டும்.தவறு செய்தது உண்மை எனில், அதற்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கும். அவர்கள் நிரபராதிகள் எனில் அச்சம் அடைய தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement