அமைதியான, பலவகையிலும் முன்னேறிய மாநிலமான கர்நாடகத்திற்கு
பாஜக
செய்து கொண்டிருப்பது மிகவும் அவமானகரமானது என்று முன்னாள் கர்நாடக அமைச்சர்
கிருஷ்ண பைரே கெளடா
கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் சமீபத்தில்
ஹிஜாப்
தொடர்பான சர்ச்சை வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இது பேசு பொருளானது. சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டங்கள் முற்றி வன்முறை உருவாகும் சூழல் ஏற்பட்ட நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக ஹைகோர்ட் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தது. கல்லூரிகளையும் அரசு மூடி நிலைமையை சரி செய்ய முயன்றது. இன்று முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கர்நாடக முன்னாள் அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா பாஜகவை கடுமையாக சாடி டிவீட் போட்டுள்ளார். அவர் போட்டுள்ள டிவீட்டில் உள்ளதாவது:
5 வருடங்களுக்கு முன்பு பெங்களூரும், கர்நாடகமும், உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை ஜாம்பவானாக தலைப்புச்செய்திகளில் அடிபட்டன, பாராட்டப்பட்டன. மிகவும் சிறந்த நகரம், ஸ்டார்ட் அப் தொழில்களின் தலைநகரம், அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்து வேகமாக வளரும் நகரம் என்றெல்லாம்
பெங்களூர்
பாராட்டப்பட்டது.
ஆனால் இன்று இளம் இந்தியர்களுக்கு இடையே நெருப்பை மூட்டி அதில் குளிர் காய ஆரம்பித்துள்ளது செய்தியாகியுள்ளது. வேலைவாய்ப்புகள் போய் விட்டன. எனவே, ஒருவரை ஒருவர் வெறுத்து பாகுபாடு பாராட்டி, மோதிக் கொள்ள பயிற்சி தர ஆரம்பித்துள்ளனர். இளம் பெண்களை அவர்களது உடைகளை வைத்து துன்புறுத்தி அதில் நாம் தலைப்புச் செய்தியாகிக் கொண்டுள்ளோம்.
பல வகையிலும் வளர்ந்த, அமைதியான கர்நாடகத்திற்கு இன்று பாஜக செய்து கொண்டிருப்பது மிகவும் அவமானகரமானது ஆகும் என்று கிருஷ்ண பைரே கெளடா கூறியுள்ளார்.