நாட்டுக்காக சேவை செய்து உயிரையும் தியாகம் செய்த எனது குடும்பத்தினரை பாஜகவினர் தினசரி கேலி செய்து வருகிறார்கள் என்று
பிரியங்கா காந்தி
குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் பிரசாரம் செய்து பேசினார் பிரியங்கா காந்தி. அப்போது மறைந்த
காங்கிரஸ்
தலைவர்களை பாஜகவினர் கேலி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரியங்கா காந்தி பேசுகையில், “எனது குடும்பத்தினர் இந்த நாட்டுக்காக சேவையாற்றி உயிரை விட்டுள்ளனர். இதை நாங்கள் எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ஆனால் இன்று அதை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக சேவையாற்றியபோது, நாட்டுக்கான பணியில் இருந்தபோது உயிர்த் தியாகம் செய்தவர்கள் அவர்கள். ஆனால் அவர்களது தியாகத்தை பாஜகவினர் தினசரி கேலி செய்து பேசுகிறார்கள். நாட்டுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்றே தெரியாதவர்கள்தான் இவர்கள்.
அவர்களுக்கு எதுவும் தெரியாது. வெறும் வாய்ப்பேச்சுதான். வெறும் பொய்யான வாக்குறுதிகள்தான். நாட்டுக்காக உண்மையாகத் துடிக்கு் இதயத்தின் உணர்வை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே தேர்தலுக்காக மட்டும்தான். தேர்தலில் ஆரம்பித்து தேர்தலோடு முடித்துக் கொள்வார்கள். உ.பிக்கு வருவார்கள், பஞ்சாபுக்கு வருவார்கள், கோவாவுக்கு வருவார்கள்..ஏன்.. தேர்தல் இருப்பதால் மட்டுமே. தேர்தல் இல்லையா திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். மாறாக அமெரிக்கா, கனடா என வெளிநாடுகளுக்குத்தான் போவார்கள்.
கடந்த 70ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன செய்துள்ளனர் என்று பாருங்கள்.. பிரதமருக்கு ரூ. 16,000 கோடியில் இரண்டு விமானங்களை வாங்கியுள்ளனர். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு, தங்களது கார்ப்பரேட் நண்பர்களுக்காக விற்று விட்டனர். மிச்சமுள்ள பொதுத்துறை நிறுவனங்களையும் விற்க பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என எதையும் விடவில்லை. எல்லாவற்றையும் விற்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். நீங்கள் எதையெல்லாம் விற்கிறீர்களோ.. அதெல்லாம் காங்கிரஸ் கொண்டு வந்தது என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்றார் பிரியங்கா காந்தி.