தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.
இதில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றனர். தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் சித்துரெட்டி என்ற விவசாயி போட்டியிடுகிறார். அதனைத்தொடர்ந்து இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பிரச்சாரம் முடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சித்துரெட்டிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பூதப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இவரது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நேற்று அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக வேட்பாளர் உயிரிழந்திருப்பது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.