திருவனந்தபுரம்: மாணவ, மாணவிகளின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு உண்டு என்றும் ஹிஜாப்பிற்காக போராடும் மாணவிகள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாப்புக்கு தடை விதித்ததால் மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்தனர். இந்நிலையில், கேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமதுகான், கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாக கூறினார். முத்தலாக் தடையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தான் ஹிஜாப் விவகாரத்தை பெரிதாக்குகிறார்கள் என்றும், இதுபோன்ற விவகாரங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில், பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என குரானில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்றும், எனவே ஹிஜாப்பிற்காக போராடும் பெண்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மாணவ, மாணவிகளின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம், பள்ளி, கல்லூரிகளுக்கு உண்டு என்றும், ஆரிஃப் முகமதுகான் குறிப்பிட்டார்.