வாஷிங்டன்: எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா பொய் சொல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இந்தச் சூழலில் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பெலாரஸ் நாட்டுடன் வழக்கமான போர் உக்தி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும். பயிற்சி ஒரு வாரத்தில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். ஏற்கெனவே சில படைகள் திரும்பி வருகின்றன என்று ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்கா இதனை மறுக்கிறது. இவ்விவகாரத்தில் ரஷ்யா பொய் உரைக்கிறது. படைகளை வாபஸ் பெறுவதாகக் கூறி சர்வதேச கவனத்தை ரஷ்யா பெற்றுள்ளது. ஆனால் உண்மையில் எல்லையில் கூடுதலாக 7000 வீரர்களைக் குவித்துள்ளது. படைகளின் கிரிட்டிக்கல் யூனிட்ஸ் எனப்படும் முக்கியப் பிரிவுகள் எல்லைக்கு அருகே முன்னேறி வருகின்றன என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆந்தணி பிளின்கன் தெரிவித்துள்ளார்.