கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக் கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் இந்த விவகாரத்தில் சர்ச்சையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வீட்டில் பாதுகாப்பு இல்லாத பெண்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும். பள்ளி, கல்லூரியில் அணியவேண்டிய அவசியம் இல்லை. மாணவிகள் பள்ளிக்கு சீருடை அணிந்து சென்று கல்வி நிறுவனங்களில் நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்.
ஹிஜாப் என்பது பர்தா ஆகும். தீய எண்ணங்களுடன் பார்ப்பவர்களிடமிருந்து தங்களை மறைத்துக்கொள்ளவே பர்தாவை பயன்படுத்தவேண்டும். ஆனால், இந்தியாவில் இந்துக்கள் யாரும் அப்படி தீய எண்ணத்துடன் பெண்களை பார்ப்பதில்லை. பெண்களை இந்துக்கள் தெய்வமாக மதிக்கிறார்கள். சனாதன கலாசாரத்தில் பெண்கள் தெய்வமாக மதிக்கப்படுகின்றனர். எனவே இந்தியாவில் ஹிஜாப் அணியவேண்டியதில்லை. வீட்டில் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொள்பவர்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும். வெளியில் குறிப்பாக படிக்கும் இடத்தில் ஹிஜாப் அணியவேண்டிய அவசியம் இல்லை. மதராசாவில் ஹிஜாப் அணியுங்கள். எங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடுகளை சீர்குலைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.
பிரக்யா சிங் தாகூர் மகாராஷ்டிராவின் மாலேகாவ் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சைக்கிளில் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.