ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்து வருகிறது.
பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கடந்த ஆண்டைப்போல், பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தை சுற்றியோ, பொது இடங்களில் கூட்டமாகவோ பொங்கல் படைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது. தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரிப்பாடு ஸ்ரீ கோவிலில் இருந்து விளக்கில் தீபம் எடுத்து வந்து மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியிடம் கொடுப்பார். அதனை கோவில் முற்றத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அப்போது அவரவர் வீடுகளில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்துவார்கள். அன்று மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். அப்போது கோவில் சார்பில் நியமிக்கப்பட்டு உள்ள பூசாரிகள் வீடுகளுக்கு சென்று பொங்கல் நிவேத்யம் சடங்குகளை நிறைவேற்றுவார்கள்.
தொடர்ந்து மாலையில், சிறுவர்களின் குத்தியோட்டம், சிறுமிகளின் தாலப்பொலி அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. இவை அனைத்தும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று கோவில் அறக்கட்டளை தலைவர் பி.அனில்குமார் தெரிவித்துள்ளார்.
நாளை  (வெள்ளிக்கிழமை) இரவு காப்பு அவிழ்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் செயல்படாது என திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோசா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.