டெல்லி: உக்ரைனில் இருந்து எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இந்தியாவுக்கு இயக்கலாம் என்று விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற அபாயம் நீடிப்பதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைனில் இருந்து வெளியேற தங்கள் நாட்டு மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைனில் இருந்து இந்தியா வர குறைவான விமானங்களே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து ஆலோசித்த வெளியுறவுத் துறை, உக்ரைனில் இருக்கும் மாணவர்கள் பதற்றம் அடைய வேண்டாம், கூடுதல் விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் வசதிக்காக 24 மணி நேரம் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியர்கள் அதிகளவில் வெறியேற முயற்சிப்பதால் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப விமான நிலையத்தில் இருக்கும் தடைகள் தளர்த்தப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பத்திரமாக வெளியேற அனைத்து வசதிகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.