புதுடெல்லி: போர் பதற்றம் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கான விமான கட்டணம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் இந்தியா திரும்ப முனைப்பு காட்டி வருகின்றனர். ஆனால் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணம் அதிரடியாக அதிகரித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இருந்த விமான டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாகவும், இது வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் முரளிதரன், விமான டிக்கெட் கட்டணம் தொடர்பாக விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.