நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துத்தான் போட்டியிடுகிறது. நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்குச் சமம். பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. பணநாயக நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க-விற்கும், தி.மு.க-விற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் நடந்த லஞ்சம், அராஜகம், ஊழல்தான் தி.மு.க-விலும் நடந்துவருகிறது. தி.மு.க-வை விட்டால் அ.தி.மு.க, அ.தி.மு.க-வை விட்டால் தி.மு.க என்ற நிலை மாற வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. நாம் தமிழர் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம். அது பா.ஜ.க-வுக்குச் சென்றுவிடும் என்று சில அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்கின்றனர். பா.ஜ.க தனித்து நிற்கிறது. அப்படி இருக்கும்போது நான் எப்படி பா.ஜ.க-வின் `பி’ டீமாக இருப்பேன். நாம் தமிழர் கட்சியின் 60-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களைக் கடத்தி வாபஸ் பெறவைத்துவிட்டனர். தையரியமிருந்தால் ஒரு பா.ஜ.க வேட்பாளரைக் கடத்தி காட்டுங்கள்” என்றார்.