டெல்லி: தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நியூட்ரினோ திட்ட அமைவிடம், மதிகெட்டான் – பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளதால் காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என தேனி மாவட்ட வனத்துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்ட அமைவிடம் புலிகளின் இடம்பெயர்வு, இனப்பெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால், புலிகளின் நடமாட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்ட அமைவிடம் வைகை அணைக்கு நீர் தரும் பெரியார் நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. திட்டத்திற்கான போக்குவரத்து, இயந்திரத்திற்கான செயல்பாடுகள், மின் இணைப்பு உள்ளிட்ட காரணிகளாலும் புலிகள் உள்பட பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியதாகவும் உச்சநீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்துவிட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது.