விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரு நாட்டு வெடிகுண்டுகள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குன்னூர் பீட் பகுதியில் வனத்துறையினர் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்புதர் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. இதனைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து, கிருஷ்ணன் கோவில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் 2 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றி, அவற்றை வெடிக்காத வகையில் பத்திரமாக மீட்டு கோவிந்தநல்லூர் குடோன் ஒன்றில் வைத்துள்ளனர். மேலும், மலைப் பகுதியில் கைப்பற்றப்பட்ட இந்த நாட்டு வெடிகுண்டுகள் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா அல்லது தேர்தல் சமயத்தில் நாட்டு வெடிகுண்டு கிடைத்திருப்பதால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் வேறு யாரும் வைத்தார்களா என பல்வேறு கோணத்தில் கிருஷ்ணன்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும், நாட்டு வெடிகுண்டுகளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.