இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பீ சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்தது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர் மறைந்த பந்துல வர்ணபுரவாகும்.
இலங்கை கலந்துக்கொண்ட ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் ரஞ்சன் மடுகல்லே, அர்ஜூன ரணதுங்க, ரோய் டயஸ் ஆகியோர் அரை சதங்களை பெற்றனர்.
இதேபோன்று இந்த போட்டியில் அசந்த த மெல் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணி இதுவரை 299 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இலங்கை அணி 95 போட்டிகளில் வெற்றியடைந்து. 113 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 91 போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் இதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.