‘எனது அம்மா சமூக சேவகி; அவரை விலைமகளாக சித்தரித்துள்ளனர்’- ‘கங்குபாய்‘ படத்திற்கு சிக்கல்?

ஆலியா பட் நடித்துள்ள ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில், உண்மை என்னவென்று தெரியாமல், கங்குபாயை விலைமகளாக காட்டுகின்றனர் என கங்குபாயின் குடும்பத்தினர் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர்.

‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். மும்பையின் சிவப்பு விளக்குப்பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலோச்சியவர் கங்குபாய் கொத்தேவாலி. இவர் மும்பையின் மாஃபியா குயின் என்றும் அழைக்கப்படுகிறார். இவரின் கதாபாத்திரத்திரத்தை தழுவித்தான் ஆலியா பட், ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். கொரோனா காணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் பிப்ரவரி 25-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ட்ரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கங்குபாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா, ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில், தனது அம்மாவை விலைமகளாக சித்தரித்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.

image

கங்குபாயை தவறாக காட்டியுள்ளதாக, கடந்த 2021-ல் ‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்திற்கு எதிராக இவர் மனு தாக்கல் செய்திருந்ததார். மும்பை நீதிமன்றம் இந்த வழக்கில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் நடிகை ஆலியா பட் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. பின்னர், ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர்கள் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், ஆஜ் தக் சேனலுக்கு பேசிய கங்குபாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா, “இந்தப் படத்தில் என் அம்மா ஒரு விலைமகளாக மாற்றப்பட்டுள்ளார். ஆனால், மக்கள் இப்போது என் அம்மாவைப் பற்றி விவரிக்க முடியாத விஷயங்களைச் சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்குபாயின் குடும்ப வழக்கறிஞர் நரேந்திரன் கூறுகையில், “ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கங்குபாய் சித்தரிக்கப்பட்ட விதம் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இது கொச்சையானது. ஒரு சமூக ஆர்வலரை விலைமகளாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எந்தக் குடும்பம் அதை விரும்பும்?. படத்தில் கங்குபாயை மாஃபியாவாக ஆக்கிவிட்டார்கள். எங்கள் சட்ட அமைப்பில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இந்த மோசமான தவறான சித்தரிப்பு பற்றி ஏதாவது செய்வதற்கு, அந்த மகன் உண்மையில் கங்குபாயின் மகன்தான் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் அதை நீதிமன்றத்தில் நிரூபித்திருந்தாலும், இந்த விஷயத்தில் எந்த விசாரணையும் இப்போது வரை இல்லை.

image

படத்தின் ப்ரோமோவில் கங்குபாயின் வாழ்க்கையைப் பற்றிய படம் எடுக்கப்படுவதை அறிந்தது முதல் போராடி வருகிறோம். இந்தப் படத்தால், கங்குபாய் உண்மையில் ஒரு விலைமகளா அல்லது சமூக சேவகியா என குடும்பத்தினரிடம், பல உறவினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் குடும்பத்தின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ‘தி மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை’ என்கிற புத்தகத்தின் எழுத்தாளர் ஹுசைன் ஜைதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால் அவர்களிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கங்குபாயின் பேத்தி பாரதி கூறும்போது, “பண ஆசையால் தயாரிப்பாளர்கள் எனது குடும்பத்தை அவதூறாக காட்டுகிறார்கள். அதை ஏற்க முடியாது. இந்தப் படத்தை தயாரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட குடும்பத்தின் சம்மதம் கேட்கவில்லை.

image

புத்தகம் எழுதும் போதும் நீங்கள் எங்களிடம் வரவில்லை. படத்தைத் தயாரிப்பதற்கு முன்பு நீங்கள் எங்களிடம் அனுமதி கேட்கவில்லை. எனது பாட்டி காமாட்டிபுராவில் வசித்து வந்தார். இதனால் அங்கு வசிக்கும் எல்லா பெண்களுமே விலைமகளாக மாறினார்களா?. என் பாட்டி நான்கு குழந்தைகளை அங்கே தத்தெடுத்தார். அதில் சகுந்தலா ரஞ்சித் காவி (பாரதியின் தாய்) மற்றும் சுசீலா ரெட்டி ஆகிய இரு மகள்களையும், பாபு ராவ்ஜி ஷா மற்றும் ரஜினிகாந்த் ராவ்ஜி ஷா ஆகிய இரு மகன்களையும் தத்தெடுத்தார்.

நாங்கள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இப்போது நாங்கள் ‘சட்டவிரோதமானவர்கள்’ என்று அழைக்கப்படுகிறோம். எங்கள் பாட்டி தத்தெடுக்கும் போது, இதுபோன்ற கடுமையான தத்தெடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் இல்லை. எங்கள் பாட்டியின் கதைகளை, நாங்கள் பெருமையாகச் சொல்வோம்.

image

ஆனால், ட்ரெய்லர் வெளியானப் பிறகு, அவர் எப்படி விலைமகளாக சித்தரிக்கப்படுகிறார் என்று மக்கள் எங்களை கேட்கிறார்கள். என் பாட்டி அங்குள்ள பாலியல் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் பாடுபட்டார். ஆனால் இந்த மக்கள் என் பாட்டியை இப்போது எப்படி மாற்றிவிட்டார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு எதிராக, கங்குபாயின் குடும்பத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதால், படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது-

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.