புதுடெல்லி:
என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குசந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை அந்த பதவி வகித்தார்.
இவரது பதவி காலத்தில் தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவருக்கும், பங்குசந்தைக்கும் பெரிதாக தொடர்பு கிடையாது. இவருக்கு மாத சம்பளமாக ரூ.15 லட்சத்துக்கு நியமிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.1.68 கோடி ஊதியம் வழங்கப்பட்டது.
2014-ல் அவரது ஊதியம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டு 2.01 கோடியானது. அதைத் தொடர்ந்து ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு ஆனந்த் சுப்பிரமணியத்துக்கான செலவு மட்டும் ரூ.5 கோடியாக அதிகரித்தது.
ஆனந்த் சுப்பிரமணியன் நியமனத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாடுகளை மீறி அவருக்கு ஏராளமான சலுகைகள், ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
பல இடைத்தரகர்கள் பயன் அடையும் வகையில் தேசிய பங்கு சந்தையில் விதிகளை மீறி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
தேசிய பங்கு சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சித்ரா ராமகிருஷ்ணன் மீது கூறப்பட்டது.
இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அவர் மீது விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணன் விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதி யானது.
சித்ரா ராமகிருஷ்ணன் இ-மெயிலை ஆய்வு செய்தபோது ஆனந்த் சுப்பிரமணியனுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்கப்பட்டு 3 நாட்கள் மட்டும் வரலாம். விரும்பும் நேரத்தில் பணியாற்றலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தைக்கு இழப்பை ஏற்படுத்தி இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கும் தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டை தடுக்காமல் இருந்த தேசிய பங்குச்சந்தை ஒழுங்கு அதிகாரி நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். மும்பையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல சென்னையிலும் 3 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அண்ணா சாலையில் உள்ள தேசிய பங்குச்சந்தை அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சென்னையில் அவருக்கு சொந்தமான 2 வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
நீண்டகாலமாக இமய மலையில் வசிக்கும் சாமியார் ஒருவரது ஆலோசனையின் பேரில் சித்ரா ராமகிருஷ்ணன் செயல்பட்டதாக கூறப்படுகிறது. சாமியாரின் அறிவுரை, கட்டளைபடிதான் தேசிய பங்குச்சந்தையை அவர் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
தேசிய பங்குச்சந்தையின் ரகசிய ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை இ-மெயில் மூலம் அந்த சாமியாருக்கு அனுப்பி வைத்து அவரின் சொல்படி அனைத்து முடிவுகளையும் சித்ரா ராமகிருஷ்ணன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.