சென்னை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், பிரசாரம் விறுவிறுப்படைந்தது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது மக்களை சந்தித்து ஓட்டு கேட்டனர்.
இன்று காலை முதல் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறந்தது. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தனர். தேர்தலுக்கு 48 மணிக்கு முன்பாக பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபடி, இன்று மாலை 6 மணியுடன் தமிழகம் முழுவதும் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.
பிரசாரம் நிறைவடைந்தபின்னர் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நட்சத்திர பேச்சாளர்கள், அரசியல் கட்சியினர் அந்தந்த வார்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் உள்ள 12838 வார்டுகளில், வேட்பாளர் மறைவு உள்ளிட்ட சில காரணங்களால் 17 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்பட உள்ள 12821 வார்டுகளில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12603 வார்டுகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 57778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவம் 31029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1.33 லட்சம் அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.