அல்ஜீரியாவில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அப்தில்மஜித் அறிவித்துள்ளார்.
கரோனாவுக்குப் பிறகு உலக அளவில் வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனை குறைக்க உலகத் தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், அல்ஜீரிய அதிபர் தனது நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு துணைபுரியும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அப்தில்மஜித் கூறும்போது, “வேலையில்லா இளைஞர்களின் கண்ணியத்தைக் காக்க மாதம்தோறும் உதவித் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வேலையில்லாதவர்களுக்கு மாதம்தோறும் 100 டாலர்கள் (இந்திய மதிப்பில் 7, 511 ரூபாய்) வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவி தொகையும் அடங்கும். நுகர்வோர்கள் பொருட்கள் மீதான வரிகளும் தள்ளுபடி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடாகவும், உலகின் 10-வது மிகப்பெரிய நாடாகவும் அல்ஜீரியா உள்ளது. அந்நாட்டின் பரப்பளவில் 5-ல் 4 பங்கு பாலைவனமாக உள்ளது. எண்ணெய் வளமிக்க நாடான அல்ஜீரியா, மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்காத நாடாக உள்ளது. அல்ஜீரிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.