காரைக்குடி அமராவதிப்புதூரில் அரசு ஐ.டி.ஐ உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இயந்திரவியல் பிரிவில் ஓவிய ஆசிரியராக அரியக்குடியைச் சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் (48) பணியாற்றி வருகிறார்.
கடந்த 8-ம் தேதி ஓவிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 18 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையில் செல்போன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். அதைக் கண்ட ஆசிரியர் ராஜா ஆனந்த், அவனைக் கண்டித்ததுடன் செல்போனை பறித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியருடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, ஆசிரியர் ஆனந்த் ராஜா செல்போனை பறிமுதல் செய்து முதல்வரிடம் ஒப்படைத்திருக்கிறார். ஐ.டி.ஐ முதல்வரும் மாணவரின் தாயாரை வரவழைத்து, இனிமேல் உங்கள் மகன் வகுப்புக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என அறிவுரை கூறி, அவரிடம் செல்போனை கொடுத்து அனுப்பினார்.
ஆசிரியரின் செயலால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், நேற்று காலை வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ராஜா ஆனந்தை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 4 இடங்களில் சரமாரியாகக் குத்தினான்.
அதில், நிலைகுலைந்த ஆசிரியர் கீழே விழுந்தார். ராஜா ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள், மாணவர்கள், அந்த மாணவனை விரட்டிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சோமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ஆசிரியர் ராஜா ஆனந்த் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.