கீவ்:
ரஷியா, உக்ரைன் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து தற்போது எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பதற்றத்தை தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.
எல்லைப்பகுதியை ஒட்டி படைகளை நிறுத்தி உள்ள ரஷியா, எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. எனினும், போர் பதற்றம் தணியவில்லை.
ராணுவ பயிற்சியை நிறைவு செய்ததால் உக்ரைன் எல்லையில் உள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் ஒரு பகுதியினர் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷியா அறிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிகுறி தென்படவில்லை என நேட்டோ தெரிவித்துளள்து.
ரஷியா உலகை தவறாக வழிநடத்துவதாகவும், சில துருப்புக்களை முகாம்களுக்கு திருப்பி அனுப்புவதாக கூறி தவறான தகவல்களை பரப்புவதாகவும் நேட்டோ கூட்டணி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. படைகளை திரும்ப பெறுவதற்கு பதிலாக பதற்றம் நிறைந்த உக்ரைன் எல்லைக்கு அருகே மேலும் துருப்புக்களை வரவழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
கடந்த 48 மணி நேரத்தில் 7,000 வரை துருப்புக்கள் அதிகரித்திருப்பதை பார்த்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை மந்திரி பென் வாலஸ் தெரிவித்தார். ரஷியா கிட்டத்தட்ட 60 சதவீத தரைப்படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்து வைத்து மிரட்டி வருவது அவர்களுக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளப்போவதாகவும் வாலஸ் கூறி உள்ளார்.
நேட்டோ கூட்டணி நாடுகள் ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவிற்கு துருப்புக்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை கொண்டு சென்றுள்ளன. ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுப்பது மற்றும் நேட்டோவின் கிழக்கு உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
போலந்து மற்றும் ருமேனியாவிற்கு 5,000 துருப்புக்களை அமெரிக்கா அனுப்பத் தொடங்கியுள்ளது. மேலும் 8,500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் பிரிட்டன் அரசும் நூற்றுக்கணக்கான வீரர்களை போலந்துக்கு அனுப்ப உள்ளது. மேலும் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்குகிறது. எஸ்டோனியாவில் வீரர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துகிறது.
ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் லிதுவேனியாவுக்கு கூடுதல் படைகளை அனுப்புகின்றன. டென்மார்க் மற்றும் ஸ்பெயின் ஆகியவை பால்டிக் கடல் பகுதியில் வான் பாதுகாப்பு பிரிவுக்கு ஜெட் விமானங்களை வழங்குகின்றன.