தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சியினரும் புதுமையான வகையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு, மக்களை கவர்ந்தனர்.
பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களாக இருந்தால், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை வசீகரிக்க தாங்கள் வெற்றிப் பெற்றால், பேருந்து நிலையம், கல்லூரி, தொழிற்சாலை உள்ளிட்டவைகளை கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். அதே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர, மின் விளக்குகள் அமைத்து தருவேன், சாக்கடை வசதிகளை மேம்படுத்துவேன், குடிநீர் வசதிகள் செய்து தருவேன், புதிய சாலைகள் போடுவேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளிப்பார்கள்.
அந்த வகையில், தஞ்சை மாவட்டம் திருவையாறு பேரூராட்சியில் 7-வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆண்டாள் அளித்துள்ள வாக்குறுதிகளை கண்டு அந்தப் பகுதி மக்கள் வாயடைத்து கிடக்கிறார்கள். காரணம் ஆண்டாள் தன்னை வெற்றிப் பெற வைத்தால், `சுப காரியங்களுக்கு ஷாமியானா பந்தல் அமைத்து தருவேன். துக்க நிகழ்வுக்கான ஐஸ் பாக்ஸை என் சொந்த செலவில் வாங்கித் தருவேன். அதை 7-வது வார்டு மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். வார்டு மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும். வார்டுக்கு என கூர்கா அமர்த்தப்பட்டு, அவருக்கான ஊதியம் எங்களால் வழங்கப்படும்’ உள்ளிட்ட வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.
ஆண்டாளின் வாக்குறுதிகள் பட்டியலில் கடைசியாக இடம்பெற்றிருப்பது ஹைலைட்டான நச் ரகம்… `24/7 மணிநேரமும் உழைத்திட உறுதி மொழி அளிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். ஆண்டாளின் இந்த நூதன தேர்தல் வாக்குறுதிகள் அந்த வார்டு மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன.