உங்களது குழந்தைகள் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்தால் அவர்களை ஆதரியுங்கள் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “பெற்றோர்கள் தங்கள் குழந்தை தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்தால் அவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஒரே பாலின திருமணத்தை சர்ச் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு கூட்டு உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிவில் யூனியன் சட்டங்களை ஆதரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வாட்டிகனின் கோட்பாட்டு அலுவலகம், தன்பாலின ஈர்ப்பாளர்களை கத்தோலிக்க பாதிரியார்கள் ஆசீர்வதிக்க முடியாது என்று ஓர் ஆவணத்தை வெளியிட்டது. இது தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
கடந்த மாதம் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய போப் பிரான்சிஸ், பெண்கள் மீது வன்முறையைக் கடத்துபவர்கள் சாத்தான் போன்றவர்கள் என்றார்.
கரோனா பெருந்தொற்று தொடங்கிய காலம்தொட்டு போப் பிரான்சிஸ் குடும்ப வன்முறை குறித்து பலமுறை பேசியிருக்கிறார். ஏனெனில் கரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.