வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. எந்த நேரத்திலும் ரஷ்ய படைகள், உக்ரைனுக்குள் ஊடுருவும் என்று அஞ்சப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, உக்ரைன் நிலைமை குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் மக்ரோன், இத்தாலி பிரதமர் மரியோ, நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜின்ஸ் ஸ்டோலன்பெர்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் அதிகரித்து வருவதும் குறித்தும், உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் பைடனுடன் தலைவர்கள் கலந்தாலோசித்தனர். கூட்டத்தின் முடிவில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
உக்ரைனுக்கு உதவி: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு 1.2 பில்லியன் யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் உறுதிப்படுத்தியுள்ளார்.