உளவை அம்பலப்படுத்திய சவுதி பெண் ஆர்வலர்| Dinamalar

வாஷிங்டன்:மென்பொருள் வாயிலாக சர்வதேச தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதை, சவுதி அரேபிய பெண் ஆர்வலர் அம்பலப்படுத்தியது எப்படி என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், சமூக ஆர்வலரான லுாஜெய்ன் அல் ஹத்லுால் என்பவர், பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு, இவரின் ‘மொபைல்போன்’ முடக்கப்பட்டதால் வெளியான தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், அதுகுறித்த முழு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
லுாஜெய்ன் அல் ஹத்லுாலின், ஐபோனில் கடந்த ஆண்டு ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவருக்கு சந்தேகம் ஏற்படவே, கனடாவை சேர்ந்த தனியுரிமை உரிமைகள் குழு ஆய்வகத்திற்கு, தகவல் தெரிவித்தார். அந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், அவரின் போனை, ஆறு மாதங்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., உளவு மென்பொருள் நிறுவனம், அவரின் மொபைல்போனை முடக்கி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அமெரிக்க அரசு அதிகாரிகள், பல உலக நாடுகளின் தலைவர்களை அந்நிறுவனம் உளவு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கான ஆதாரங்களும் சிக்கின.இதையடுத்து, என்.எஸ்.ஓ., நிறுவனத்திற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனம், சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டு வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.