டெல்லி வீரர் யாஷ்துல் ரஞ்சி கோப்பை கிர்க்கெட் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று கவுஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற தமிழக கேப்டன் விஜய் சங்கர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி அணிக்கு யாஷ் துல்லும், துருவ் ஷோரேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். துவக்கத்திலேயே 8 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் துருவ் ஷோரே சந்தீப் வாரியர் பந்தில் பாபா அபராஜித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்தவர்களில் நிதிஷ் ரானா 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஜாண்டி சிந்து, ஓரளவு தாக்குப்பிடித்து தன் பங்கிற்கு 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விக்கட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் அண்மையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட யாஷ் துல் சதம் அடித்து அசத்தினார். யாஷ் துல், 150 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்த போது முகமது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இன்றைய ஆட்டம் ரஞ்சி கோப்பை போட்டியில் இவருக்கு அறிமுக ஆட்டமாகும். ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரித்விஷா ஆகியோரும் ரஞ்சி கோப்பை அறிமுக ஆட்டத்தில் சதமடித்து சாதனை புரிந்துள்ளனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் டெல்லி அணி 90 ஓவர்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து 291 ரன்களை எடுத்துள்ளது. லலித் யாதவ் 45 ரன்களுடனும், சிமர்ஜீத் சிங் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் சார்பில் சந்தீப் வாரியர், முகமது, பாபா அபரஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கேப்டன் விஜய சங்கர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.