புதுடெல்லி: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கடந்த 2011ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், 2.5 கிமீ பரப்புக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘தேசிய வனவிலங்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,’ என 2019ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நியூட்ரினோ திட்டம் மக்களுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த ஓரிரு தினத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசும் தெரிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் நேற்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடம், மதிகெட்டான் பெரியார் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. இதனால், டாடா நிறுவனத்திற்கு இத்திட்டற்கான காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். போடி மேற்கு மலை, புலிகள் வசிக்கக் கூடிய மேகமலை, திருவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் மனிதர்களால் சிறிய இடையூறு ஏற்பட்டாலும் கூட, இந்த மலைப்பகுதியை புலிகள் முற்றிலும் தவிர்க்கும் சூழல் ஏற்படும். அதனால், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது,’ என கூறப்பட்டுள்ளது.