கரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை பிரேக்த்ரூ தொற்று என மருத்துவ உலகில் கூறப்படுகிறது.
ஆனால், இந்த பிரேக்த்ரூ தொற்று ஏற்படுபவர்களுக்கு உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை.
ஜர்னல் செல் என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை பிரசுரமாகியுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களே இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். கரோனா ஒரிஜினல் வைரஸைவிட டெல்டா, ஒமைக்ரான் திரிபுகள் அதிகமான பரவும் தன்மையும், எதிர்ப்பாற்றலை மீறி தாக்கும் திறனும் கொண்டுள்ளன. அதனாலேயே தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களையும் கூட இந்த திரிபுகள் தொட்டுப் பார்க்கின்றன. ஆனால், பிரேக்த்ரூ தொற்று ஏற்படும் போது உடலில் ஆன்டிபாடி பல மடங்கு அதிகரிக்கிறது.
இதற்காக ஆராய்ச்சியாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தடுப்பூசிக்குப் பின்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் நபர்களை தேர்வு செய்து குழுக்களாகப் பிரித்தனர்.
அவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆன்டிப்பாடி அளவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர்.
இந்த ஆய்வில், வெறும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை ஒப்பிடும்போது அதன் பின்னர் பிரேக் த்ரூ கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடலில் நியூட்ரலைஸிங் ஆன்டிபாடி அதிகமாகவே உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் இத்தகைய பிரேக்த்ரூ தொற்று ஏற்படுவதைத் தடுக்கவே 3வது, 4வது டோஸ் என அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட அங்கு பிரேக்த்ரூ தொற்றுக்கள் குறைந்தபாடில்லை.
இந்தச் சூழலில்தான் பூஸ்டர் டோஸ்கள் போடுவதை அதிகரிப்பதைக் காட்டிலும் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கலாம் என ஃபைஸர் மருந்து நிறுவன சிஇஓ பரிந்துரைத்துள்ளார்.
இருப்பினும் கரோனா தாக்கியவர்களுக்கு தானாகவே உடலில் ஏற்படும் எதிர்ப்பாற்றல் எத்தனை காலம் நீடிக்கும் என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது. அதே வேளையில் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியவர்களுக்கு 9 மாதங்களில் அதன் ஆற்றல் குறையத் தொடங்கும் என அறிவியல்பூர்வமாக கூறப்படுகிறது.