சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இவற்றில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடக்கிறது. அரசியல் கட்சிகள் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட உள்ளன. 218 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளுக்கு 57,600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பேண்டு வாத்தியம், கரகாட்டம், ஒயிலாட்டம் என நேற்றைய பிரச்சாரம் களைகட்டியது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்ட மக்களுடன் காணொலி காட்சி வாயிலாக நேற்று வாக்கு சேகரித்து, பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 6-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கோவையிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வார்டுகளுக்கு தொடர்பில்லாத வெளியாட்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையும் மீறி யாரேனும் தங்கியுள்ளனரா என திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு சோதனை நடத்தினர்.
இன்று காலை 11 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள், கரோனா பாதுகாப்புக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் போலீஸாரும் உடன் அனுப்பப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 1 லட் சத்து 33 ஆயிரம் வாக்குச்சாவடி அலு வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. தேர்தல் அலுவலர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உரிய பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப் பட்டு தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட உள் ளன. அந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண் காணிக்கப்பட உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாநில தேர்தல் ஆணையர் ஆகியோர் அலுவலகத்தில் இருந்தவாறு பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் பகுதிகளில் மதுக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. 19-ம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் 22-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர் பாக புகார்களை பெற மாநில தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 18004257072, 18004257073, 18004257074 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 670 புகார்கள் வந்துள்ளன.
1.13 லட்சம் போலீஸார்
தேர்தல் பாதுகாப்புப் பணியில் 1 லட்சத்து 13 ஆயிரம் காவலர்கள் ஈடுபட இருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தேர்தல் நியாயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடக்க காவல்துறை சார்பில் 1,343 நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் பகுதிகளுக்கு விரைந்து சென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது விற்பனை, ஆயுதங்கள் கடத்துவதை தடுக்கவும் சம்பந்தமில்லாத நபர்கள் தேர்தல் நடக்கும் பகுதிக்கு வருவதை தடுக்கும் பொருட்டும் 455 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர வாகன சோதனை நடந்து வருகிறது.
காவல் மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 17,788 அதிகாரிகளும், 71,074 ஆண் மற்றும் பெண் காவலர் களும், தமிழ்நாடு சிறப்பு படையைச் சேர்ந்த 9,020 காவலர்கள் உள்ளிட்ட 97,882 போலீஸார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 12,321 ஊர்க்காவல் படையினரும், 2,870 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற போலீஸார் என மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 73 காவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள் ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கரோனா தடுப்பு நெறி முறைகளை கண்டிப்பாக பின்பற்றதக்க அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்துள்ளது.