ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் பதற்றம், உலக நாடுகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசர கூட்டம் ஒன்றை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தியுள்ளது. இதில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “அதிகரித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்தைத் தணிக்க ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளைத் தான் நாம் மேற்கொள்ள வேண்டும். அது தான் காலத்தின் தேவையும் கூட. உலக நாடுகளின் அமைதியைப் பாதுகாப்பதே நோக்கமாக ஏற்று, அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வமான பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு அதற்கான உடனடித் தீர்வை காண்பதில்தான் இந்தியாவின் ஆர்வமும் உள்ளது.
இது தொடர்பான அனைத்து தரப்பினருடனும் இந்தியா தொடர்பில் உள்ளது. மேலும் அறிவார்ந்த பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்பதே எங்களின் கருத்து. ஆக்கபூர்வமான ராஜதந்திரமே இப்போதைய தேவை” என பேசினார்.
அதிகரித்து வரும் உக்ரைன் பதற்றம் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.