மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது… வெளிவரும் பகீர் பின்னணி


தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் பிற உடல் பிரச்சினைகள் இருந்துள்ளது.

இந்த சூழலில் பூசாரி முனுசாமியை பற்றி கேள்விப்பட்டதும் மகளை குணப்படுத்திடலாம் என்ற நம்பிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹேமமாலினியை அவரது பெற்றோர் முனுசாமியிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது முனுசாமி ஹேமமாலினிக்கு தோஷம் இருப்பதாகவும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் என்னுடனே தங்கி பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இரவு நேர பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் தெரிவித்துளளார்.

மேலும், அந்த நேரத்தில், பெரும்பாலான இளம்பெண்கள் திருமண வரன் வேண்டி முனுசாமியிடம் இரவு பகல் என வந்து ஆசிர்வாதம் பெற்று சென்றுள்ளனர். இதனை கவனித்ததாலோ என்னவோ ஹேமமாலினியை கடந்த ஒரு வருட காலமாக பல இரவு முனுசாமியின் பூஜை அறையிலேயே தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, கல்லூரிக்கு சென்று வந்த ஹேமமாலினி அடிக்கடி இரவு பூஜையில் கலந்துகொள்வதற்காக முனுசாமியின் வீட்டில் தனது தங்கையுடன் சென்று தங்கி வந்துள்ளார். அண்மையில் நேரடி வகுப்புகள் தொடங்கியும் ஹேமமாலினி கல்லூரிக்கு செல்லாமல் முனுசாமியின் வீட்டிலேயே முடங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹேமமாலினி கடந்த இரு நாட்களுக்கு முன்பு பூஜைக்காக முனுசாமியின் வீட்டுக்கு தங்கையுடன் சென்றுள்ளார். அன்று இரவு ஹேமமாலியின் அத்தையும் அங்குள்ள கோவில் ஒன்றில் தங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மறுநாள் காலை ஹேமமாலினி வாந்தி எடுத்துவிட்டு மூச்சி பேச்சின்றி மயங்கி விழுந்துள்ளார். உடனே ஹேமமாலினியின் அத்தை சாமியார் முனுசாமியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால், முனுசாமி உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு நேரம் கழித்து ஆட்டோ ரிக்ஷவை வரவழைத்து மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் ஹேமமாலினி பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமமாலினி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாமியார் முனுசாமியை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மாணவி எப்படி இறந்தார், தலைமறைவானது ஏன் மற்றும் ஆசிரமத்துக்கு வந்த மாணவியை வீட்டுக்கு அழைது சென்றது ஏன் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் ஹேமமாலினி வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து ஹேமமாலினி பெற்றோர் கதறி அழுதுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.