திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படாது என்றும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்தில் கேரளா அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், அரசின் 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படாது என்றும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்றும் கேரளா ஆளுநர் தனது உரையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனிடையே ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் கவர்னர் என்ற முழக்கங்களை எழுப்பியபடி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளும் மார்க்சிஸ்ட் மற்றும் ஆளுநர் இடையே கூடா நட்பு உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படாது என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.