ஜெனீவா: கரோனா தொற்று இல்லாத நாடுகள் எவை என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு தேசங்கள்.
துவாலு: பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த நாட்டு காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் அங்கம் வகிக்கிறது. கரோனா பரவல் தொடங்கியவுடன் இந்த நாடு கட்டாய தனிமைக்குச் சென்று எல்லைகளை மூடியது. இப்போது அங்கு 50% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
டொகேலு: தெற்கு பசிபிக் கடலில் உள்ள இந்த நாடு நியூசிலாந்துக்கு அருகில் உள்ளது. இந்த நாட்டில் ஒரே ஒரு விமான நிலையம்தான் உள்ளது. இதன் மக்கள் தொகையே வெறும் 1500 தான். இங்கு இதுவரை கோவிட் தொற்று ஏற்படவே இல்லை.
செயின்ட் ஹெலெனா: தெற்கு அட்லான்டிக் கடலில் உள்ள இந்த நாடு பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கும் கரோனா தொற்றில்லை.
பிக்டெய்ர்ன் தீவுகள்: பசிபிக் கடலில் உள்ள இந்த நாட்டில், பாலினீசியர்கள் தான் பூர்வக்குடிகள். பின்னர் 1606-ல் இந்த நாடு கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மக்கள் வாழத் தொடங்கினர். இங்கே 100ல் 74 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நியு: தெற்கு பசிபிக் கடலில் உள்ள மற்றொரு குட்டித் தீவு நாடு இது. இந்த நாட்டில் உள்ள பவளப்பாறைகள் வளமானவை. இந்த தேசமே பவளப்பாறை சார்ந்த சுற்றுலாவை நம்பியுள்ளது. இங்குள்ள 100 பேரில் 79 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.
நவுரு: இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மூலையில் உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் இந்த நாட்டை ஓர் அவுட்போஸ்டாகப் பயன்படுத்தியது. இங்கு இப்போதைக்கு கரோனா இல்லை. 100ல் 68 பேர் தடுப்பூசி செலுத்தியவர்களே.
மைக்ரோனேஸியா: இந்த நாட்டில் சூக், கோஸ்ரீ, போன்பெய், யாப் என நான்கு பகுதிகள் உள்ளன. நான்கையும் இணைத்து ஃபெடரேட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்ரோனேஸியா என அறியப்படுகிறது. இங்கு 100ல் 38.37 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
இந்த நாடுகள் தவிர துர்க்மேனிஸ்தான், வட கொரிய நாடுகளிலும் கரோனா இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் வட கொரியாவும், துர்க்மேனிஸ்தான் தங்கள் நாட்டில் பதிவான கரோனா தாக்கங்களை வெளியுலகிற்கு தெரிவிக்காமல் மறைக்கிறதோ என்ற சந்தேகமும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.