கரூர் தி.மு.கவினரை வெளியேற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் போலீஸாரால் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டனர். பொதுக் கூட்டங்களின் போது மட்டுமல்லாமல், பிரச்னைகளின் போதும் பிரமாண்டம் காட்டுவது வேலுமணியின் ஸ்டைல்.
கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர் வீட்டில் ரெய்டு நடத்தியபோது கூட, அங்கு திரண்ட தொண்டர்களுக்கு டீ, டிபன், சாப்பாடு, ரோஸ்மில்க் இறக்கி விருந்தோம்பல் செய்தார்.
தேர்தல் நெருங்கும் நிலையில், நேற்று இரவுதான் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து சென்றார் வேலுமணி. இன்று காலை மீண்டும் எம்.எல்.ஏ- க்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தவர் அப்படியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். சம்பிரதாயத்துக்காக சில நிமிடங்கள் மட்டுமே போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், “கரூர்காரங்களை வெளியேத்துங்க. இல்ல தி.மு.க ஜெயிச்சுட்டதா இப்பவே அறிவிச்சுடுங்க.” என்று கொதித்தனர். 1..2..3..4.. மணி நேரம் என்று போராட்டம் நீடித்தது.
வேலுமணி, எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் சற்று காலை நீட்டியபடி அமர்ந்தாலும், போராட்டாத்தை கைவிடுவதாக இல்லை. அதிகாரிகள் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. “பாஸ் லன்ச் டைம் வேறு நெருங்குது.” என்று அனைவரும் மைண்ட் வாய்ஸில் குமுறிக் கொண்டிருக்க, அவ்வபோது பிஸ்கெட், சாக்லெட்கள் வந்து கொண்டிருந்தன.
வேலுமணி தனது உதவியாளரிடம், “எல்லாருக்கும் சாப்பாடு சொல்லுப்பா.” என்றார். சில நிமிடங்களில் அன்னபூர்ணா ஹோட்டலில் சுட சுட சாப்பாடு இறங்கியது.
சாப்பட்டுக்கு செட்டில் பண்ணுப்பா என்று வேலுமணி உத்தரவும் போட்டார். எல்லோரும் சாப்பிடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், போலீஸார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றுவிட்டனர்.
பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ராம்நகர் பகுதியில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாக சாப்பிட முடியாவிடினும், மண்டபத்தில் சாப்பிட்டனர்!