இந்திய எனர்ஜி பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யப்போகும் கிரீன் ஹைட்ரஜன் பாலிசியின் முதல் பகுதியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு இத்திட்டத்திற்கான கொள்கை அறிவிப்பில் இத்துறை நிறுவனங்களுக்குப் பல தளர்வுகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள் எப்படிக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, இந்தக் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி மூலம் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் இலக்குடன் இந்தக் கிரீன் ஹைட்ரஜன் பாலிசியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சரி கிரீன் எனர்ஜி என்பது என்ன..? இதன் மூலம் என்ன பயன்..? கிரீன் ஹைட்ரஜன் பாலிசியில் இத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை என்ன..?
நேஷனல் கிரீன் ஹைட்ரஜன் கொள்கை – முழு விபரம்
கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா
கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா என்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் தண்ணீரைப் பிரிக்கும் எலக்டோலைசிஸ் முறை மூலம் தயாரிக்கப்படுவது. இந்த முறையில் எவ்விதமான கார்பன் வெளியேற்றமும் இல்லாதது கூடுதல் சிறப்பு.
பயோமாஸ்
மத்திய அரசு கிரீன் ஹைட்ரஜன் கொள்கையின் ஒரு பகுதியாகப் பயோமாஸ் (Biomass) மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன்/அமோனியா -வையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரீன் ஹைட்ரஜன் பயன்பாடு
இந்தியாவில் சுற்றுச்சூழல் நிலையை அதிகம் மாசுபடுத்தும் ஸ்டீல், கப்பல், சுத்திகரிப்புத் துறையில் கிரீன் ஹைட்ரஜன் பயன்பாட்டின் மூலம் பசுமையான துறையாக மாற்ற முடியும். இதேபோல் இந்தியாவில் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பயன்படுத்தும் பெரும்பாலான துறையில் இதற்குப் பதிலாகக் கிரீன் ஹைட்ரஜன் பயன்படுத்த முடியும்.
கிரீன் அமோனியா
கிரீன் ஹைட்ரஜன் வைத்து தான் கிரீன் அமோனியாவை தயாரிக்க முடியும். கிரீன் அமோனியாவை பியூயல் செல் வாயிலாக எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் போக்குவரத்துத் துறை தான் முதன் முதலாகக் கிரீன் அமோனியா-வை எரிபொருளாகப் பயன்படுத்த முன்வந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கிரீன் ஹைட்ரஜன் மூலம் பல துறையில் பல விதமாகப் பயன்படுத்த முடியும்.
எரிபொருள், நிலக்கரி
கிரீன் ஹைட்ரஜன் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், நிலக்கரி அளவுகள் பெரிய அளவில் குறையும், இதன் மூலம் நாட்டின் நிதிநிலை மேம்படுவது மட்டும் அல்லாமல் உற்பத்தியில் அதிகப்படியான பணத்தை நிறுவனங்களாலும், அரசாலும் சேமிக்க முடியும்.
5 மில்லியன் டன் கிரீன் ஹைட்ரஜன்
கிரீன் ஹைட்ரஜன் பாலிசி மூலம் மத்திய அரசு பருவகால மாற்ற இலக்கை அடைவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு இந்தியாவை ஹைட்ரஜன் ஹப் ஆக மாற்றும் மிகப்பெரிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசு 2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் டன் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்து கிரீன் ஹைட்ரஜன் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசு சலுகைகள்
இந்த 5 மில்லியன் டன் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கை அடைய இத்துறையில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது மத்திய அரசு.
1. கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா இந்தியாவில் எங்கு இருந்து வேண்டுமானாலும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம் பெற முடியும்.
2. கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா உற்பத்தியாளர்கள் விண்ணப்பம் சமர்ப்பித்து 15 நாட்களுக்குள் டிரான்ஸ்மிஷன் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
3. உற்பத்தியாளர்கள் வாங்கிப் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாமல் போனால் 30 நாட்கள் வரையில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்.
4. மின்சார விநியோக உரிமதாரர்களிடம் இருந்து தள்ளுபடி விலையில் மின்சாரத்தை வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும்.
5. மாநிலங்கள் மத்தியிலான டிரான்ஸ்மிஷன் கட்டணத்தை 25 வருடங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது
6. பவர் கிரிட் உடன் இணைப்பு மிகவும் முக்கியமான கொண்டு முதலில் செய்யப்பட உள்ளது
7. கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா சார்ந்த நிறுவனங்களுக்கு ஒற்றை ஜன்னல் முறையில் வேகமாக ஒப்புதல் அளிக்கும் பணிகள் செய்யப்படும்.
8. ஏற்றுமதிக்கு ஏதுவாக விமான நிலையம், துறைமுகப் பகுதிகளில் கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா சேமிக்கப் பங்கர் அமைக்கப்படும்
9. கிரீன் ஹைட்ரஜன்/அமோனியா தயாரிப்புக்காகச் சிறப்புப் பகுதி நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது
What is Green Hydrogen? List of sops given on First Green Hydrogen Policy
What is Green Hydrogen? List of sops given on First Green Hydrogen Policy கிரீன் ஹைட்ரஜன் என்றால் என்ன..? இத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை என்ன..?