சேலம்: “குண்டர்களையும, ரவுடிகளையும் வெளியேற்றுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோவை மாநகராட்சியில் ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “எஸ்.பி.வேலுமணி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள், குண்டர்களை வெளியேற்ற வேண்டும் என்று நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்த பின்னரும் மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை ஆணையரிடமும் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது, அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குண்டர்களையும, ரவுடிகளையும் வெளியேற்றுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. நாளை நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். ஆகவே, கோவை மாநகராட்சியில் தங்கியிருக்கக்கூடிய ரவுடிகளும், குண்டர்களும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தபின்னர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியூரில் இருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்போதும் கோவை மாநகராட்சியில் சென்னையிலிருந்தும், கரூரிலிருந்தும் தற்போதைய மின்துறை அமைச்சர் உத்தரவின்பேரில், அங்கே தங்கி ஒரு வன்முறையை உருவாக்க இருக்கிறார்கள். எனவே, உடனடியாக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தலையிட்டு ஜனநாயக முறைப்படி நாளை தேர்தல் நடைபெற வேண்டும்.
கோவை மாநகராட்சியில் தங்கியிருக்கின்ற குண்டர்களையும், ரவுடிகளையும் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த புகாரின் பேரில் கோவை மாநகராட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கோவை மாநகராட்சியில் ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும். கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளுக்கும் காவல்துறை துணையோடு ஹாட் பாக்ஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, காலை 10.30 மணி முதலே ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கோவை கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியால் வெளியூர் குண்டர்கள் – ரவுடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை தாக்குகின்றனர். பொதுமக்களை மிரட்டுகின்றனர். இதற்கெல்லாம் காவல்துறையும் துணை. காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடக்கிறது.
காவல்துறை அதிகாரிகளை மாற்றுமாறு நாங்கள் பலமுறை மனு கொடுத்துவிட்டோம். அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. வீட்டில் கால் முறிந்து படுத்திருக்கும் அதிமுக தொண்டர் மீது பொய்யாக வழக்கு போடுகிறது. ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இங்கு அதிமுக வெற்றி பெறும் சூழல் இருக்கிறது. அதனாலேயே திமுகவினர் இத்தனை குழப்பம் செய்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் நாளை வாக்குப்பெட்டியைக் கூட தூக்குவார்கள். வெளியூர் குண்டர்களை காவல்துறை வெளியேற்ற வேண்டும். தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கோவையில் உள்ள வெளியூர்களைச் சேர்ந்த திமுகவினர் வெளியேற்றப்பட வேண்டும். போலீஸார் மைக் மூலமாக உத்தரவிட வேண்டும் என்று கோரி போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். 4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.