தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் முத்துப்பேச்சி (40). மாற்றுத்திறனாளியான முத்துப்பேச்சிக்கு திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் இறந்துவிட்டதால் தனது சகோதரி பொன்னுத்தாயுடன் அவர் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை முதல் முத்துப்பேச்சியை காணவில்லை என அவரது உறவினர்கள் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், முத்துப்பேச்சி வீட்டிற்கு அருகே உள்ள மனோஜ் என்பவரின் வீட்டிற்குள் அவர் கொலை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மனோஜை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, மனோஜின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தான் முத்துப்பேச்சியை கொலை செய்ததாக குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள், அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற முயன்ற காவல்துறையினருக்கும், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தால் தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் சார்பாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM