கொல்கத்தா:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களிலும், இஷான் கிஷன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். பார்மை இழந்திருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலளித்தார் கோலி. இப்போட்டியில் கோலி 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர்களுடன் 52 ரன்கள் சேர்த்தார். முன்னதாக சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
106 ரன்களில் 4 விக்கெட் இழந்த நிலையில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். வெங்கடேஷ் அய்யர் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்க்க இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.