கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைச் சேமிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “2 அணுமின் உலைகள் இயங்கிக்கொண்டும், 2 உலைகள் கட்டுமானத்திலும், 2 உலைகள் கட்டுவதற்கான திட்டத்திலும் இருக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசோடு ஆலோசிக்காமல் அணுமின் நிலைய வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேகரிக்கும் திட்டம் கொண்டுவருவதாக இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்களிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அணுக்கழிவுகளை சேமித்துவைப்பதால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இந்த திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர். எனவே, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலைமாற்ற அமைச்சகம், அணுக்கழிவுகளை தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திலேயே சேகரித்து பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவிற்கே அனுப்பிட ஆலோசனை வழங்கியதைக் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
இந்தக் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே அனுப்ப ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொள்வதோடு, அது சாத்தியப்படாவிட்டால், மக்கள் வசிக்காத , சுற்றுச்சூழல் பாதிக்காத பகுதியில் ஆழ்நிலை கிடங்கு அமைத்து அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த கடிதத்துக்கு பூவுலகின் நண்பர்கள் குழு, “கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தில் இன்று நீங்கள் எடுத்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வழிகாட்டும்” என்று நன்றி தெரிவித்துள்ளனர்.