தி.மு.க அமைச்சர் தம்பி vs அ.தி.மு.க மா.செ மகன்: வாரிசுகள் போட்டியில் தூத்துக்குடி மகுடம் யாருக்கு?

த. வளவன் 

கூட்டணி பலத்துடன் அசுர பலத்துடன் முத்துக் குளிக்க தயாராகிறது திமுக.வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் திமுகவை விரட்டுகிறது அதிமுக. மற்ற கட்சிகள் அனைத்துமே தனியாக போராடத் தயாராகி  வருகின்றன. இந்த முக்கோண மோதலில் திமுகவே முந்துகிறது.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடியை  தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக  2008ம் ஆண்டு  அப்போதைய தமிழக முதல்வர்  கருணாநிதி அறிவித்தார். பரதவர் இன மக்கள் மீன் பிடித்தல், சங்கு குளித்தல் மற்றும் முத்துக் குளித்தல் செய்து வருவதால்  இம்மாவட்டத்திற்கு ‘முத்து நகர்’ என்ற பெயரும் உண்டு. தூத்துக்குடியில் பொதுவாக திமுக, அதிமுக இடையே இருமுனை போட்டி தான் இருக்கும். ஆனால் இந்த முறை பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என ஐந்து கட்சிகளும் தத்தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

திமுக கூட்டணி சார்பில் தூத்துக்குடியின்  60 வார்டுகளில் திமுக  50  வார்டுகளிலும் காங்கிரஸ் 6 வார்டுகளிலும் சிபிஎம், சிபிஐ , மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. அதிமுக தனியாக 60 வார்டுகளிலும், பாஜக 52 வார்டுகளிலும், அமமுக 47 வார்டுகளிலும் நாம் தமிழர் கட்சி 39 வார்டுகளிலும் மக்கள் நீதிமய்யம் 25 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.  

திமுகவில் மேயர் வேட்பாளராக அறியப் படுபவர் பழுத்த அரசியல்வாதியும் கலைஞரின் முரட்டு பக்தன் என்று அழைக்கப் படுபவருமான தூத்துக்குடியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன். அமைச்சர் கீதா ஜீவனின் தம்பி. தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் இருக்கும் உட்கட்சி மோதலை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜெகன் அனைத்து வார்டுகளிலும் அதிருப்தியாளர்கள், சுயேச்சைகள் என பட்டியல் போட்டு தனது செல்வாக்கினால் வளைத்துப் போட்டிருக்கிறாராம்.இதனால் களைத்துப்  போயிருக்கிறது அதிமுக கூடாரம். 

அதிமுகவில் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும்  அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மகன் ராஜாவும் களத்தில் தந்தையின் அறிவுரைப்படி  சுறுசுறுப்பாக இருக்கிறார். தூத்துக்குடி மாநகராட்சியின் மேஜர் பிரச்சனைகளை முன்னிறுத்தும் ராஜா தான் மேயரானால் தூத்துக்குடியை சொர்க்கபுரியாக  மாற்றுவேன் என்று  பிரச்சாரம் செய்கிறார். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் விதமாக அந்தந்த வார்டுகளில் செல்வாக்கான சுயேட்சைகளுக்கு சில லகரங்களை கொடுத்து உசுப்பேற்றி வருகிறது.  அதிமுக மாவட்ட செயலாளருக்கு எதிர்த்தரப்பு அணி தலைவர் செல்லப்பாண்டியன். இதற்கு காரணம் பெரும்பாலான இந்த தரப்பு ஆதரவாளர்களுக்கு சண்முகநாதன் சீட் கொடுக்காமல் புறக்கணித்தது  தானாம். 

பாஜகவை பொறுத்தவரை தனியாக ஒன்றிரண்டு வார்டுகளிலாவது வென்றுவிட வேண்டும் என தீவிரமாக இருக்கிறது. இதனால் பண பலமுள்ள வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் பிரபுவை மேயர் வேட்பாளராக சொல்கின்றனர் பாஜகவினர். பிரபு தொடர்ந்து 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

அமமுகவை பொறுத்த வரையில் அதிமுக வெற்றி பெற்று  விடக்  கூடாது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இதனாலேயே அதிமுக மாவட்ட செயலாளர் மகன் ராஜாவை எதிர்த்து முன்னாள் அதிமுக யூனியன் சேர்மனும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ விபிஆர் ரமேஷின் தம்பியான விபிஆர் சுரேஷை போட்டியிட வைத்திருக்கிறாராம் தினகரன். அதிமுகவின் வாக்குகளை பிரிப்பதே இவர்களின் லட்சியம். இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக கட்சிகளின் நிலை மிகப் பரிதாபம். இவர்கள் ஆங்காங்கே வேட்பாளர்களை  நிறுத்தி பெயருக்கு ஸ்பீக்கர் கட்டி வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது தம்பி ஜெகனை மேயர் வேட்பாளராகவும் அவரது  ஆதரவாளர்களான  முன்னாள் திமுக மாவட்ட துணை செயலாளர் ராஜ் மோகன் செல்வின் மற்றும் நிர்மல் ராஜ் போன்றவர்களை  மாற்று வேட்பாளராகவும், துணை மேயர் வேட்பாளராகவும்  ரேஸில் ஓட விட்டிருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

கூட்டணி பலம், அதிகார பலத்துடன்  சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் இணைவதால் திமுக கூட்டணி அசுர பலத்துடன் முன்னணியில் இருக்கிறது. அதிமுக வாக்கு வங்கியில் ஏற்பட்டிருக்கும் முக்கோண மோதலால் அதிமுகவுக்கு டபுள் டிஜிட் வருவதே சிரமம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.பாஜகவும் சுயேட்சைகளும் சில வார்டுகளை கைப்பற்றலாம்.சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலில் காணாமலும் போகலாம். மொத்தத்தில் திமுகவே தூத்துக்குடியில் முத்துக்குளிக்க  அதிக வாய்ப்பு இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.