வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்து வருகிறது. எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் ஊடுருவதற்கான முயற்சியில் ரஷ்யா உள்ளது. எனவே, உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்முடிவை தற்போதே பரிசீலியுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், சுமார் 1 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர்ச் சூழல் உருவாகி இருக்கிறது. இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
முன்னதாக, உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.